தானே கிரேன் விபத்து – 17 பேர் உயிரிழப்பு
மகாராஷ்டிரா மாநிலம் தானேவின் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் பாலம் கட்டும் பணியின் போது ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் நடந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
மும்பையில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ள ஷாஹாபூர் தாலுகாவிற்கு உட்பட்ட சர்லம்பே கிராமத்திற்கு அருகே நள்ளிரவு 12 மணியளவில் விபத்து நடந்தது. பாலம் கட்டுவதற்கும், நெடுஞ்சாலை கட்டுமான திட்டங்களில் ப்ரீகாஸ்ட் பாக்ஸ் கர்டர்களை நிறுவுவதற்கும் பயன்படுத்தப்படும் மொபைல் கேன்ட்ரி கிரேன் திடீரென சரிந்து விழுந்தது. இதில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். அதில் இருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். ஷஹாபூர் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “தொழிலாளர்களின் மரணம் மிகவும் சோகமாகவும், இதயத்தை உலுக்குவதாகவும் உள்ளது. அவர்களுக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். அவர்களின்
குடும்பத்தாரின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம். இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.