பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானை கத்தியால் குத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் விதித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான், மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது அப்பார்ட்மெண்டில் மர்மநபர் கத்தியால் குத்தியதில் பலத்த காயம் அடைந்தார். இதனை அடுத்து, அவர் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் ஐசியூவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், மும்பை காவல்துறையினர் 35 தனிப்படைகள் அமைத்து, சயிஃப் அலிகானை கத்தியால் குத்திய நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று தானேவில் சயிப் அலிகான் மீது தாக்குதல் நடத்திய விஜய் தாஸ் என்ற வங்கதேச நாட்டைச் சேர்ந்தவரை போலீசார் கைதுசெய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் முகமது ஷெரீபுஃல் இஸ்லாம் என தெரிய வந்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பே சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்து, தனது பெயரை விஜய் தாஸ் என மாற்றி வீட்டு வேலை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், சயிஃப் அலிகான் வீட்டில் திருட்டில் ஈடுபடும் நோக்கத்தில் அவர் நுழைந்ததும் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட முகமது ஷெரீபுஃல் இஸ்லாமை போலீசார் மும்பை பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிபதி அவருக்கு 5 நாள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார்.