பெங்களூரு எம் ஜி ரோட்டில் பற்றி எரிந்த அரசு பேருந்து, உயிர் தப்பிய பயணிகள் – அப்பகுதியில் பெரும் பரபரப்பு
பெங்களூரு நகரில் உள்ள எம் ஜி ரோட்டில் திடீரென அரசு பேருந்து தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தில் இருந்த 30 பயணிகள் உயிர் தப்ப தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர்.
பெங்களூரு நகரில் உள்ள எம் ஜி ரோட்டில் அனில் கும்ப்ளே சர்க்கிள் அருகே அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்த போது திடிரென்று பேருந்தின் இஞ்சின் பகுதியில் இருந்து நெருப்பு வர துவங்கியது. உடனடியாக பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் பயணிகள் அனைவரும் இறங்கி ஓடும் படி கூறியுள்ளார்.
பேருந்தில் இருந்த 30 பயணிகளும் உடனடியாக உயிர் பயத்தில் கீழே இறங்கி ஓட துவங்கினர். பயணிகள் ஒருபுறம் கீழே இறங்கி ஓடிய நிலையில் சில வினாடிகளில் பேருந்தில் தீ அனைத்து இடங்களிலும் பற்றி எரிய ஆரம்பித்தது உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். இந்த பேருந்து கோரமங்களா டிப்போவை சார்ந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.