பெங்களூருவில் தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் தங்கத்துக்கு இணையாக தன்ணீரை வாங்கிச் செல்லும் அவலநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளது பலரையும் வேதனை அடையச் செய்துள்ளது.
இதுவரை பார்க்காத கடுமையான தண்ணீர் பஞ்சத்தை பெங்களூரு நகரம் எதிர்கொண்டுள்ளது. ஏற்கனவே போடப்பட்ட 3000 ஆழ்துளை கிணறுகள் நீரன்றி வறண்டு கானப்படுகின்றன. தங்களுடைய தினசரி தண்ணீர் தேவைக்காக பலரும் லாரி தண்ணீரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பெங்களூருவில் 1 கோடியே 40 லட்சம் மக்கள் இருக்கின்றனர். அவர்களுடைய ஒருநாள் தண்ணீர் தேவை 1500 மில்லியன் லிட்டராக உள்ளது. தற்போது பல்வேறு இடங்களில் நீர் பற்றாக்குறை நிலவி வருவதால், அந்நகரமே அல்லாடி வருகிறது. தண்ணீர் தேவையை போக்க முடியாமல் மக்கள் பலரும் தவித்து வருகின்றனர்.
அங்குள்ள பள்ளிகள், பயிற்சிகள் மையங்களை தற்காலிகமாக மூடும்படி மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடம் எடுக்கும் படியும், ஐ.டி. நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நகரத்தில் எங்கு பார்த்தாலும் தண்ணீருக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை தொடருகிறது. தொழில்துறை நிறுவனங்கள் பழைய நிலைக்கு திரும்பும் வரை ஊழியர்களை வேலைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளன. பல இணையதளவாசிகள் நிலைமை எப்போது சீரடையும் என்று கேட்டு முதல்வர் சித்தராமையாவை டேக் செய்து பதிவிட்டு வருகின்றனர்.
பெங்களூரு மருத்துவமனைகளும் தண்ணீர் பிரச்னையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ழிப்பறைகளுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரை நம்பி இருக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோடை தொடங்கும் முன்பே மார்ச் மாதத்தில் தொடங்கிய நெருக்கடியால் பெங்களூரு தீயணைப்புத் துறையின் நீர் ஆதாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
இதனால் தண்ணீர் டேங்கர் லாரிகளை நம்பி இருக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலைமையை பயன்படுத்திக் கொண்டு டேங்கர் லாரி ஓட்டுநர்கள் பலர் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, தனியார் தண்ணீர் டேங்கர்களை கட்டுப்படுத்துவது, அவற்றின் விலையை நிர்ணயிப்பது உள்ளிட்ட பல அவசர நடவடிக்கைகளை கர்நாடக அரசு. எனினும் பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு தீரவில்லை.
நிச்சயமற்ற பருவமழை மற்றும் காலநிலை மாற்றம் தவிர, திட்டமிடப்படாத நகரமயமாக்கல், மக்கள்தொகை பெருக்கம், மோசமான தொழில்துறை, விவசாய கொள்கைகள் உள்ளிட்டவை தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணம் என்று நிபுனர்கள் கூறுகின்றனர். நீர் ஆதாரங்களை ஒருங்கிணைத்து, தண்ணீர் மேலாண்மை செய்வதன் மூலமே இதுபோன்ற பிரச்னை எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று நிபுணர்கள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.