Homeசெய்திகள்இந்தியாமகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி தோல்வி அடையும் - வெளிவந்த கருத்து கணிப்பு

மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி தோல்வி அடையும் – வெளிவந்த கருத்து கணிப்பு

-

மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜக – ஷிண்டே சிவசேனா கூட்டணி தோல்வியை தழுவும் என்று கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த 2019 ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக – சிவசேனா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. எதிரணியில் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து களம் கண்டது. 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கட்சி கூட்டணியில் பாஜக 104 தொகுதிகளிலும் சிவசேனா 57 தொகுதிகளில் வென்றது. பாஜக கூட்டணி 162 இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சி 45 தொகுதிகள், தேசியவாத காங்கிரஸ் 53 மற்றும் கூட்டணி கட்சிகள் சேர்த்து 104 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

fadnavis

இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் ஆட்சி அமைந்தது. இடையில் எவரும் எதிர்பாராத வகையில் பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா கட்சி விலகி காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து உத்தவ் தாக்கரே முதலமைச்சரானார். அதிரடி அரசியலுக்கு பெயர்போன மகாராஷ்டிராவில் பாஜகவும் தன் பங்கிற்கு விளையாட ஆரம்பித்தது. கட்டுக்கோப்பாக இருந்த சிவசேனாவை உடைத்தது. அந்த கட்சியில் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்த ஏக்நாத் ஷிண்டேவிற்கு முதலமைச்சர் ஆசையை காட்டி கட்சியை உடைத்தது. 2022 ஜூலை 30 தேதி பாஜக ஆதரவுடன் ஷிண்டே முதல்வரானார். தற்போது வரை பதவியில் இருந்து வருகிறார்.

shinde

இந்த ஆண்டு இறுதியில் அந்த மாநிலத்திற்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. மழையின் காரணமாக தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தேர்தலை மனதில் கொண்டு முதலமைச்சர் ஷிண்டே, குடும்ப பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார்.

maha vikas agadi

இதனிடையே தனியார் நிறுவனம் தற்போது மக்களின் மன நிலை எப்படி உள்ளது என்று கருத்து கேட்டு வெளியிட்டுள்ளது. “எலெக்சன் ட்ரேக்” என்ற தனியார் கருத்து கணிப்பு நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலத்தை 6 மண்டலங்களாக பிரித்து கருத்து கணிப்பு நடத்தியுள்ளது. அதில் ஆளும் பாஜக – ஷிண்டே சிவசேனா கூட்டணி 112 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறியுள்ளது. காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் – உத்தவ் தாக்கரே சிவசேனா கூட்டணி 165 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை இழந்தால் அது அக்கட்சிக்கு பெரும் இழப்பாக அமையும் என்று கருதப்படுகிறது.

MUST READ