மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது.
288 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக, ஷிண்டே சிவசேனா, அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் இன்று மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும் என தெரியவந்துள்ளது.
என்டிடிவி நிறுவன தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 175 முதல் 195 தொகுதிகள் வரை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி 85 முதல் 112 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும், மற்ற கட்சிகள் 8 தொகுதிகள் வரை வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பா.ஜ.க. கூட்டணி 137 முதல் 157 தொகுதிகள் வரை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி 126 முதல் 146 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும், மற்ற கட்சிகள் 2 முதல் 8 தொகுதிகள் வரை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நியூஸ் 18 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பா.ஜ.க. கூட்டணி 154 தொகுதிகள் வரையிலும், இந்தியா கூட்டணி 128 தொகுதிகள் வரையிலும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் 6 தொகுதிகள் வரை வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏபிபி நிறுவன கருத்துக்கணிப்பில் பா.ஜ.க. கூட்டணி 150 முதல் 170 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 110 முதல் 130 தொகுதிகள் வரையிலும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. இதர கட்சிகள் 8 முதல் 10 தொகுதிகள் வரை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.