ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட தேர்தல் அமைதியான நடந்து முடிந்த நிலையில், இன்று 2ஆம் கட்ட தேர்தல் நடைபெற்றது. காலை தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்தலில் பொதுமக்கள் ஆர்வமுடன் தங்களது வாக்கினை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என தெரியவந்துள்ளது. என்.டி.டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பா.ஜ.க. கூட்டணி 42-47 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணி25-30 தொகுதிகள் மட்டுமே வெல்லும் என்றும், இதர கட்சிகள் 1-4 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸ் 18 தேர்தலுக்கு பிந்தய கருத்துக்கணிப்பில் பா.ஜ.க. கூட்டணி 47 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், இந்தியா கூட்டணி 30 தொகுதிகள் வரை வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் 4 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல் டைம்ஸ் நவ் நிறுவன தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பா.ஜ.க. கூட்டணி 40-44 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும், இந்தியா கூட்டணி 30-40 தொகுதிகள் வரை வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் ஒரு இடத்தில் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.