குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் வீட்டை இடிப்பது அரசியல் சாசனத்துக்கும், அடிப்படை உரிமைக்கும் எதிரானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உத்தரபிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேம் உள்ளிட்ட வட மாநிலங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டு வந்தது. இதற்கு எதிர்த்து உச்சநீதிமன்றம் பல்வேறு பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
இந்நிலையில் புல்டோசர்களை கொண்டு கட்டடங்களை இடிப்பதற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, ஜனநாயக நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய வேண்டும் என்றும், வீடு என்பது ஒவ்வொருவரின் கனவு, புகலிடம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். சட்டத்தின் ஆட்சி என்பது ஜனநாயக அரசாங்கத்தின் அடித்தளம் என்றும், மக்களின் உடைமைகளை சட்டத்துக்கு எதிராக இடிக்கக் கூடாது என்றும் தெரிவித்த நீதிபதிகள், வீடுகளை இடிப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் குறிப்பிட்டனர்.
குற்றவாளிகளின் ஆக்கிரமிப்பு வீடுகளாக இருந்தாலும், சட்ட நடைமுறைகளின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் வீட்டை இடிப்பது அரசியல் சாசனத்துக்கும், அடிப்படை உரிமைக்கும் எதிரானது என்றும் தெரிவித்தனர்.