நீட் தேர்வை ரத்துசெய்வது நியாயமில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நடத்தப்பட்டது. தொடர்ந்து தேர்வு முடிவுகள் கடந்த மாதம் (ஜீன்) 4ம் தேதி வெளியானது. அப்போது நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பது தெரியவந்தது. சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்திருந்தனர். அதிலும் ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய, அடுத்தடுத்த தேர்வெண் கொண்ட 6 மாணவர்கள் முதலிடம் பிடித்திருந்தனர். அதன்பிறகே வினாத்தாள் கசிவு, 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கியது உள்ளிட்ட மோசடிகள் வெளிவந்தன.
இந்த சர்ச்சைகளை தொடர்ந்து மறுதேர்வுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசுக்கும், தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமைக்கும் சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கிடையே ஏற்கனவே நிலுவையில் இருந்த நீட் தேர்வு தொடர்பான 25 வழக்குகளுடன் இந்த வழக்கும் உச்சநீதிமன்றத்தில் வருகிற 8ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. 8ம் தேதிக்கான வழக்கு பட்டியலை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கவுள்ளது.
இந்த நிலையில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது. அதில் நடந்து முடிந்த நீட் தேர்வில் பெரிய அளவில் ரகசியத் தன்மை மீறப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும், முழு தேர்வையும் ரத்து செய்வது நியாயமானதாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், தேர்வை முற்றிலுமாக ரத்து செய்வது, 2024ம் ஆண்டுக்கான வினாத்தாளை எழுத முயன்ற லட்சக்கணக்கான நேர்மையான விண்ணப்பதாரர்களுக்கு “பெரும் ஆபத்தை விளைவிக்கும்” எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் சதி, ஏமாற்றுதல், ஆள் மாறாட்டம், நம்பிக்கை மீறல் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக முழு விசாரணை நடத்த சி.பி.ஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.