சென்னை – பெங்களுரு 3 மணி நேரத்தில் செல்லலாம்: பசுமைவழி விரைவு சாலை பணிகள் தீவிரம்
சென்னை பெங்களூரு இடையே 262 கி.மீ தூரம் கொண்ட பசுமை வழி விரைவு சாலை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிவடைந்தால் சென்னையில் இருந்து 3 மணி நேரத்தில் பெங்களூருவை அடையாளம் என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் வணிக போக்குவரத்து சுற்றுலா மாநிலங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நெடுஞ்சாலைகளை அமைத்து அதனை பராமரித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலத்துறை நெடுஞ்சாலைதான் சாலை பாலம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை துறை மாநிலத்தின் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைத்து விரைவாக இலக்கை அடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தன்னிச்சையாகவும், மாநில அரசுடன் இணைந்தும் பல்வேறு சாலை மேம்பால திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தென்னிந்தியாவின் இரண்டு முக்கிய நகரங்களான, சென்னை மற்றும் பெங்களூருவை இணைக்கும் வகையில் 262கிமீ நீளத்துக்கு பசுமை வழி விரைவு சாலை அமைக்கும் பணிகளில் நெடுஞ்சாலை துறை தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல் நாடு முழுவதும் பசுமைவழி விரைவு சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் சென்னை பெங்களூரு விரைவு சாலை பணிகள் தொடங்கப்பட்டு ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால் இந்தியாவின் மிகப்பெரிய சாலைகளில் இதுவும் ஒன்றாக அமையும்.
சென்னை மற்றும் பெங்களூருவுக்கு இடையே தற்போது இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று சென்னையில் இருந்து கோயம்பேடு, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், கிருஷ்ணகிரி, ஓசூர், சந்தபுரா, எலக்ட்ரானிக் சிட்டி ,வழியாக பெங்களூருக்கு 372கிமீ நீள முள்ள என்எச்48 தேசிய நெடுஞ்சாலை மற்றொன்று கோயம்பேடு, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, சித்துர், முள்பகால், ஒசகோட்டே, வழியாக பெங்களூருக்கு 335 கிமீ நீளமுள்ள என் எச் 75 தேசிய நெடுஞ்சாலை தற்போது அமைக்கப்பட்டு வரும் விரைவு சாலை இந்த இரண்டு நெடுஞ்சாலைக்கு இடையே அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல 5 முதல் 6 மணி நேரம் வரை ஆகிறது.