பீகார் தலைநகர் பாட்னாவில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் இன்று (ஜூன் 23) காலை 11.00 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை வரை நீடித்தது. எதிர்க்கட்சிக் கூட்டத்தில், முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, ஹேமந்த் சோரன், அரவிந்த் கெஜ்ரிவால், பக்வந்த் மான் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள ராகுல்காந்தி அழைப்பு
கூட்டத்திற்கு பிறகு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய முதலமைச்சர் நிதிஷ்குமார், “பா.ஜ.க. அல்லாத பெரும்பாலான மாநில முதலமைச்சர்கள் முதல் கூட்டத்தில் பங்கேற்றனர். எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒருமனதாக ஆலோசித்து முடிவெடுத்துள்ளோம். பா.ஜ.க.வை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விரிவாக விவாதித்தோம். ஹிமாச்சல் பிரதேசம் சிம்லாவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். எதிர்க்கட்சித் தலைவர்களை ஒன்றாக இணைந்து தேர்தலைச் சந்திக்க முடிவு செய்துள்ளோம். வரும் ஜூலை 12- ஆம் தேதி சிம்லாவில் நடைபெறும் அடுத்த சுற்றுக் கூட்டத்திற்கு மல்லிகார்ஜுன கார்கே தலைமை வகிக்கவுள்ளார்” என்றார்.