மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி., அபிஷேக் சிங்வியின் இருக்கைக்கு அடியில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் அதானி விவகாரம் உள்பட முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க வலியுறுத்தி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் மனு சிங்வி இருக்கைக்கு கீழே பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அவை நடவடிக்கைகள் முடிந்த பிறகு பாதுகாவலர்கள் நடத்திய சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த தனது இருக்கைக்கு அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் தன்னுடையது அல்ல என்று காங்கிரஸ் எம்.பி அபிஷேக் சிங்வி மறுப்பு தெரிவித்துள்ளார். தான் மாநிலங்களவைக்கு பகல் 12.57 மணிக்கு வந்திருந்ததாகவும், பின்னர் அவையில் ஏற்பட்ட அமளி காரணமாக 1 மணி முதல் 1.30 மணி வரை நாடாளுமன்ற உணவகத்தில் இருந்ததாகவும், அங்கு மதிய உணவு சாப்பிட்டு விட்டு 1.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் இருந்து புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. மீதான மாநிலங்களவை தலைவரின் புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.