கேஸ் சிலிண்டருக்கு பூஜை! நாளை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் காங்கிரஸ் நூதனம்
கர்நாடக மாநிலத்தில் நாளை சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் டி கே சிவக்குமார் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினார்.
பத்திரிகையாளர் சந்திப்புக்கு முன்பு அங்கு வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஊதுபத்தி மற்றும் கற்பூரம் தீபாராதனை காண்பித்து சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்பு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், “நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடி விலை ஏற்றத்தை குறித்து பேசி ஆட்சிக்கு வந்த பிறகு தற்பொழுது கேஸ் சிலிண்டரின் விலை உச்சத்தை எட்டி இருப்பதை மறந்து விட்டார். அவருக்கு இந்த விலை ஏற்றத்தை ஞாபகப்படுத்தும் வகையில் ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் நாளை வாக்குச்சாவடிக்கு செல்வதற்கு முன் வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கேஸ் சிலிண்டரை வைத்து இதே போல பூஜை செய்து வழிபாடு நடத்தி பின்பு அவர்கள் வாக்களிக்க செல்ல வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.
பாஜக அரசுக்கு எதிராகவும் விலை ஏற்றத்தை கண்டித்தும் காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் தொண்டர்களிடம் நூதன பிரச்சாரத்தை தேர்தல் தினத்தின் அன்று மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.