மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக தலைமையிலான ஷிண்டே சிவசேனா, அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற பாஜக முதலமைச்சர் பதவிவை விரும்பியது. ஆனால் ஏக்நாத் ஷிண்டே பதவியில் நீடிக்க வேண்டும் என சிவசேனா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பின்னர் இறங்கி வந்த சிவசேனா உள்துறை, நிதி துறை மற்றும் சபாநாயகர் பதவியை ஒதுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்க விரும்புவதாகவும் ஷிண்டே தெரிவித்திருந்தார்.
நாளை பதவி ஏற்பு விழா நடைபெறும் சூழலில் இன்று நடைபெற்ற பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்படி மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்க பா.ஜ.க. மத்திய குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனை தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து, ஆட்சி அமைக்க பட்னாவிஸ் உரிமை கோரினார். அவருடன் ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். இதனை தொடர்ந்து, நாளை முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.