ஆஞ்சநேயரின் அருமைகளை இளைஞர்களுக்கு எடுத்துரைப்போம்- டிகே சிவக்குமார்
ஆஞ்சநேயரின் அருமைகளை இளைஞர்களுக்கு எடுத்துரைப்போம் என கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் மே 10 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என கடந்த மார்ச் 29 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அரசியல் கட்சிகள் மாநிலம் முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் பரப்புரையில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவக்குமார், “கர்நாடகாவில் பஜ்ரங் தள் அமைப்பை தடை செய்யும் திட்டம் ஏதும் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. மாநில அரசால் ஒரு அமைப்பை தடை செய்யமுடியாது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், மாநிலம் முழுவதும் உள்ள ஹனுமான் கோயில்களை மேம்படுத்துவோம். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய ஆஞ்சநேய கோயில்கள் கட்டுவதற்கும் எங்கள் கட்சி முன்னுரிமை அளிக்கும்.இளைஞர்களிடம் ஆஞ்சநேயரின் அருமைகளை எடுத்துரைக்க நிகழ்ச்சிகள் நடத்தப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பஜ்ரங்க் தள் அமைப்புக்கு தடை என காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்ததை எதிர்த்து அந்த அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், காங்கிரஸ், தனது நிலைபாட்டில் மாற்றம் கொண்டுள்ளது.