Homeசெய்திகள்இந்தியாடெல்லியின் புதிய முதலமைச்சர் நாளை தேர்வு!

டெல்லியின் புதிய முதலமைச்சர் நாளை தேர்வு!

-

டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விலகும் நிலையில், புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக நாளை ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

டெல்லி மாநில மதுபானக் கொள்கை வழக்கில் கடந்த மார்ச் 21-ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பின்னர் சிபிஐ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 2 வழக்குகளில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து அவர் கடந்த 13-ஆம் தேதி மாலை சிறையிலிருந்து விடுதலையானார். இந்த நிலையில் டெல்லியில் நேற்று கட்சியினரிடையே உரையாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால், 2 நாட்களில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் டெல்லியின் அடுத்த முதலமைச்சர்  யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

adishi

கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, அமைச்சர்கள் அதிஷி, கோபால் ராய்,  கைலாஷ் கெலாட் ஆகியோரில் ஒருவர் அடுத்த முதலமைச்சராகும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருவாய்த்துறை முன்னாள் அதிகாரியான சுனிதா, அரசு மற்றும் நிர்வாகம் குறித்து நன்கு அறிந்தவர் ஆவார். அதேவேளையில் 14 துறைகளை கவனித்து வரும் அதிஷி, கெஜ்ரிவால் சிறை சென்ற பின்னர் டெல்லி அரசை வழிநடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, நாளை காலை 11 மணி அளவில் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் நடைபெறும் என்றும், இக்கூட்டத்தில் அடுத்த முதலமைச்சர் யார் என முடிவெடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மாலை 4.30 மணி அளவில் துணை நிலை ஆளுநரை சந்திக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், அப்போது புதிய முதலமைச்சரை அவர் அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

 

 

MUST READ