டெல்லி மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
அமலாக்கத்துறை விசாரணைக்கு பிறகு நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த மே 10ம் தேதி மக்களவைத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட இடைக்கால நிபந்தனை ஜாமினை உச்ச நீதிமன்றம் வழங்கியது.
ஜூன் 1ம் தேதி இறுதி கட்ட வாக்குப்பதிவிற்கு மறுநாளான ஜூன் 2ம் தேதி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டிருந்தது. இதனிடைய தனக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டித்து வழங்க வேண்டும் என புதிய மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்துள்ளார்.
குறிப்பாக உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் தனக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால ஜாமின் மேலும் 7 நாட்கள் நீட்டித்து வழங்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் மனுவில் தெரிவித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்தியா” கூட்டணி வெற்றி பெற்றால் நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டியதில்லை என்று தேர்தல் பிரச்சாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாக உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை புகார் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்குமா அல்லது நிராகரிக்குமா? என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.