டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து
டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 14 அலுவலர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.
டெல்லியில் காவல்துறை தலைமையகத்திற்கு உள்ளே வருமானவரித்துறை கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் உள்ள மத்திய வருவாய் அலுவலகத்தில் மாலையில் திடீரென புகை கிளம்பியது. நெருப்பு பற்றியதை உணர்ந்த அலுவலர்கள் உடனடியாக அங்கிருந்து கீழே ஓடி வந்தனர். அதற்குள் ஒரு அறை முழுவதும் தீ பரவியதால் 10-க்கும் மேற்பட்ட ஆண், பெண் அலுவலர்கள் அலறினர். ஜன்னல்களில் நின்றபடி சிலர் உதவி கேட்டு அபய குரல் எழுப்பினர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த 21 தீயணைப்பு வாகனங்களில் சென்று தீயணைப்பு வீரர்கள் 14 அலுவலர்களை ஏணி மூலமாக பத்திரமாக மீட்டனர்.ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
மூச்சு திணறலால் மயக்கும் அடைந்த 46 வயதான மற்றொரு அலுவலக கண்காணிப்பாளர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதற்கிடையே நீண்ட நேரம் போராடிய தீ அணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
முக்கிய ஆவணங்கள் வருமான வரி தொடர்பான கணினி தரவுகள் உள்ள தலைமை வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ பற்றியது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். ஏற்கனவே கடந்த மாதம் 16 ஆம் தேதி டெல்லியில் உள்ளே ஒன்றிய நிதி மற்றும் உள்துறை அமைச்சகத்தின் முக்கிய அலுவலகங்கள் உள்ள நார்த் அவென்யூ கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
2016 ஆம் ஆண்டு டெல்லியில் தேசிய இயக்கிய வரலாற்று அருங்காட்சியகம் முற்றாக எரிந்ததும் குறிப்பிடத்தக்கது.