எரிமலை போல் பீரிட்ட தீ- ஆந்திராவில் பரபரப்பு
ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் ரஜோலு பகுதியில் தண்ணீருக்காக போடப்பட்டு கொண்டிருந்த ஆழ்துளை கிணற்றில் வாயு கசிவு ஏற்பட்டு திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் ராஜோலு மண்டலம் சிவகோடு பகுதியில் பண்ணை குட்டை அமைத்து மீன், இறால் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த பண்ணைக்காக இன்று காலை போர்வேல் சுவிட்ச் ஆன் செய்தபோது ஆழ்துளை கிணற்றுக்கான போர்வேலில் இருந்து தண்ணீருக்கு பதில் எரிவாயுடன் தீ பிழம்புகள் எரிமலை போல் வந்தது. இதுகுறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் ஓஎன்ஜிசி தீயணைப்பு வீரர்கள் மற்றும் அரசு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
எரிவாயுடன் தீ பீரிட்டு வருவதால் அதை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என்று தீயணைப்பு நிபுணர்கள் குழுவினர் ஆலோசித்து வருகின்றனர். இந்த பண்னை குட்டையில் இருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் ஓ.என்.ஜி.சி. உலர் கிணறு இருப்பதால் அங்குள்ள பைப் லைனில் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என கிராம மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். ஓஎன்ஜிசி பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நரசாபுரத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை குழுவினருக்கு நிலைமையை தெரிவித்த நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்த பின்னர் அந்த தீ கட்டுப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.