முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பா.ஜ.க கட்சியில் இணைந்து, நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுதொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சமீபமாக கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட வீரர்கள் பலர் தீவிர அரசியலில் களமிறங்கி வருகின்றனர். முன்னாள் வீரர் சித்து பஞ்சாப் காங்கிரஸில் இணைந்து எம்.பி ஆனார். அதையடுத்து காங்கிரஸில் சேர்ந்த அவர் மாநில அமைச்சரானார். அம்மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
முன்னாள் கிரிக்கெட் தொடக்க ஆட்டக்காரராக இருந்த கவுதம் காம்பீர் பா.ஜ.கவில் சேர்ந்து டெல்லி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். இப்போது அவர் எம்.பி-ஆக உள்ளார். ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த ஹர்பஜன் சிங், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.
அந்த வரிசையில் யுவராஜ் சிங் விரைவில் பா.ஜ.க கட்சியில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மக்களவைத் தொகுதியில் அக்கட்சி சார்பில் வேட்பாளராகவும் அவர் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி கடந்த சில நாட்களாக பரபரப்பை கிளப்பி வந்தன.
இந்நிலையில் இந்த தகவலை யுவராஜ் சிங் முற்றிலும் மறுத்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள யுவராஜ் சிங், “நான் பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியாகி வருகின்றன. குர்தாஸ்பூர் தொகுதியில் நான் போட்டியிடவில்லை, அரசியலிலும் கால்பதிப்பதாக இல்லை. என்னுடைய ஆர்வம் வேறு விதமாக இருக்கிறது. திறமைசாலிகளுக்கு ஊக்கம் கொடுத்து அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் மனநிலையில் நான் செயல்பட்டு வருகிறேன். அதற்காகவே என்னுடைய YOUWECAN அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஒரு காலத்தில் இந்திய அணியின் ஆல்ரவுண்டராகவும் அதிரடி பேஸ்ட்மேனாக இருந்தவர் யுவராஜ் சிங். அவரை எல்லாவிதமான ரசிகர்களுக்கும் பிடிக்கும். அப்படிப்பட்ட ஒருவர் அரசியலில் களமிறங்குவதறு அவரது ரசிகர்களே அதிருப்தி கூறி வந்தனர். தற்போது தான் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளதை அடுத்து, அதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.