வங்கிகளில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, வைர வியாபாரிகள் நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பியோடினர். அவர்களுடைய சொத்துகள் முடக்கப்பட்டன.
இந்நிலையில், மக்களவையில் துணை மானிய கோரிக்கைகளின் மீதான விவாதத்தின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கையில் கூறியது,
பாதிக்கப்பட்ட பலருடைய சொத்துகளை சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளது. சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடை சட்டத்தின் 8 (7) மற்றும் (8) பிரிவுகளை அமலாக்கத் துறை சிறப்பாக கையாண்டு சொத்துகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.22,280 கோடியாகும். அதில், விஜய் மல்லையாவின் சொத்துகளை விற்று அவர் கடன் வாங்கியிருந்த வங்கிகளுக்கு திருப்பி அளிக்கப்பட்ட ரூ.14,000 கோடியும் அடங்கும் என கூறினார்.
அதை சுட்டிக்காட்டி தன்னிடமிருந்து இரு மடங்கு கடன் வசூலிக்கப்பட்டுள்ளதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் விஜய் மல்லையா ,“கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வட்டியுடன் சேர்த்து மொத்த கடன் ரூ.6,203 என கடன் மீட்பு தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் அமலாக்கத் துறை மூலம் வங்கிகள் என்னிடம் இருந்து ரூ.14,131.60 கோடியை வசூலித்துள்ளது. என்னை இன்னும் ஒரு பொருளாதார குற்றவாளி என்றே நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் குறிப்பிடுகிறார். என்னிடமிருந்து அமலாக்கத் துறை மற்றும் வங்கிகள் இரண்டு மடங்கு கடனை எப்படி எடுத்தார்கள் என்பதை சட்டபூர்வமாக நியாயப்படுத்த முடியாவிட்டால், அது தொடர்பாக நிவாரணம் கோர எனக்கு உரிமை உண்டு.” என பதிவிட்டுள்ளார்.
இன்ஸ்டாவில் லைக்ஸ் வாங்க இளைஞரின் செயல் – கைதில் முடிந்த சொகம்