சபரிமலை செல்லும் பக்தர்கள் பூஜை நேரம், போக்குவரத்து வசதிகளை தெரிந்துகொள்ள ‘செயலி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கார்த்திகை மாதம் 1-ந்தேதி (ஆங்கிலம் 16-ந்தேதி) தொடங்கும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு யாத்திரை சமயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரள்வர். அதே போல சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாதந்தோறும் நடை திறக்கப்படும். அப்போது குறிப்பிட்ட சில நாள்களில் நாடெங்கும் இருந்து பக்தர்கள் வந்து தரிசித்து செல்வது வழக்கம்.
கூட்டநெரிசலைத் தடுக்க பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை கேரள அரசுடன் இணைந்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு செய்து வருகிறது.
அந்த வகையில், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில் பூஜை நேரம், போக்குவரத்து வசதி உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொள்ள ‘Swami Chatbot’ எனும் செயலியை கேரள அரசு அறிமுகம் செய்தது.
AI தொழில் நுட்ப உதவியுடன் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் பக்தர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் முதல்வா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இச்செயலியின் இலச்சினையை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ளார்.
இது தொடா்பாக முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சுவாமி ஏஐ சாட்பாட் செயலியை பக்தா்கள் தங்கள் அறிதிறன் பேசிகளில் நிறுவி, ஏஐ மூலம் உரையாடலில் தகவல்களை மலையாளம், தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் சாட்பாட் வழங்கும். இந்த ஆண்டு புனித யாத்திரை காலத்தில் ஐயப்ப பக்தா்களுக்கு மிகவும் வசதியான, துல்லியமான மற்றும் பாதுகாப்பான யாத்திரை அனுபவத்தை சாட்பாட் உறுதி செய்யும். இச்செயலி விரைவில் பக்தா்களின் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.