லாரி மீது ஜீப் மோதி பயங்கர விபத்து- 5 பேர் பலி
கர்நாடகாவில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த லாரி மீது ஜீப் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் யாத்கிரி மாவட்டத்தில் ராய்சூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சக்ரா என்ற கிராமத்தில் இன்று அதிகாலை ஜீப் ஒன்று அதிவேகமாக சென்று சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது மோதியது. இந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் நாந்தியாலா மாவட்டத்தில் உள்ள வெலகூடா என்ற கிராமத்தில் இருந்து கல்புர்கி மாவட்டத்தில் காஜா பந்தே நவாஸ் உருஸ் இஸ்லாமிய திருவிழாவில் கலந்து கொள்ள 18 பேர் ஒரே ஜீப்பில் பயணித்து கொண்டிருந்த போது யாத்கிரியில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை நேரம் என்பதால் ஜீப் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததாகவும், இதனால் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் இந்த விபத்தில் 13 பேர் காயம் அடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் முனீர் (40), நயாமத் (40), முதுமத் (12), ரமீசா பேகம் (50), சுமி (12) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். யாத்கிரி நகரில் உள்ள சைதாபுரா காவல்நிலையத்தில் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.