கார்நாடக மாநிலத்தில் தனது பெயருக்கு சொத்தை எழுதி வைக்க மறுத்த தாயை இரும்பு அடித்துக் கொலை செய்த மகன், போலீசாருக்கு பயந்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தார்வார் நகரை சேர்ந்தவர் சாரதா பஜந்தரி(60). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலகுறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், இவர் தனது மகன் ராஜேந்திரா(40) உடன் வசித்து வந்தார். ராஜேந்திரா வேலைக்கு செல்லாமல் வீட்டில் வெட்டியாக இருந்துள்ளார். சாரதாவுக்கு விதவை உதவித்தொகை வந்துகொண்டிருந்த நிலையில், அதனை வைத்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இதேபோல் சாரதாவுக்கு குடும்ப சொத்துகள் சில இருந்துள்ளன. இதனிடையே ராஜேந்திரா அடிக்கடி தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் சாரதா சொத்தை எழுதி கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன் தினம் ராஜேந்திரா தனது பெயருக்கு சொத்தை எழுதி வைக்க கோரி சாரதாவிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் சாரதா அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரா வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் சாரதாவை அடித்து கொலை செய்தார். இதனை தொடர்ந்து தன்னை போலீசார் கைது செய்துவிடுவார்களோ என பயந்த ராஜேந்திரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.