கேரளா இடைத்தேர்தல்- சாண்டி உம்மன் வெற்றி
கேரளா மாநிலம் புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றியை உறுதி செய்தார் காங்கிரஸ் வேட்பாளர் சாண்டி உம்மன்.
கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி(80) உடல் நலக்குறைவு காரணமாகப் பெங்களூருவில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி அதிகாலை 4.25 மணியளவில் காலமானார். இதையடுத்து அவர் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்த புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு கடந்த செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் உம்மன் சாண்டி மகன் சாண்டி உம்மன் போட்டியிட்டார்.
கேரளாவின் புதுப்பள்ளி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. ஆளும் LDF வேட்பாளர் ஜெய்க் சி தாமஸ் – 38180 வாக்குகள் பெற்றுள்ளார். இடதுசாரி வேட்பாளரான இவரை விட, காங்கிரஸ் வேட்பாளர் சாண்டி உம்மன் – 71697 வாக்குகள் பெற்றுள்ளார். இதேபோல் பாஜக வேட்பாளர் லிஜின் லால் – 5990 வாக்குகள் பெற்றுள்ளார்.
கேரள மாநிலம் புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் தனது வெற்றி உறுதியான நிலையில், உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன், தனது தந்தையின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த உம்மன் சாண்டியின் மகள் அச்சு உம்மன், “உம்மான் சாண்டியின் மறைவை புதுப்பள்ளி மக்கள் நினைவுகூர்ந்துள்ளார்கள். 53 ஆண்டுகள் உம்மன் சாண்டி என்ன செய்தார் என்பதை எடுத்துக்காட்டி உள்ளார்கள். இனி சாண்டி உம்மன் கையில் புதுப்பள்ளி பத்திரமாக பாதுகாக்கப்படும்” என நம்பிக்கை தெரிவித்தார்,