வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் கடன் தவணைகளை, அரசு வழங்கிய உதவித் தொகையிலிருந்து வங்கி கழித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 31ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 430க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். நிலச்சரிவில் வீடுகளையும், உடமைகளையும் இழந்து ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். இந்தநிலையில், நிலச்சரிவில் தப்பியவர்களுக்கு அரசு வழங்கிய நிவாரணத் தொகையிலிருந்து, கேரள கிராமின் வங்கி தவணை தொகையை கழீத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அவசரத் தேவைகளுக்கு ரூ.10 ஆயிரம் உதவித் தொகையை வங்கிக்கணக்கில் வரவு வைக்க கேரள அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கேரள கிராமின் வங்கி, தங்களிடம் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் பெற்ற கடனுக்கான தவணையை, அரசு அளித்த அவசரகால நிதியிலிருந்து கழித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பலர் வீடுகட்டவும், வீட்டை மறுசீரமைப்பு செய்யவும் கிராமின் வங்கியில் கடன் வாங்கியிருந்த நிலையில், அதற்கான தவணையாக ரூ.3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை பிடிக்கப்பட்டு உள்ளது. கிராமின், வங்கியின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள கேரள அரசு, கடன் தவணைகளை திரும்ப அளிக்குமாறு கிராமின் வங்கிக்கு அறிவுறுத்தி உள்ளதாக அதிகாரிகள் கூறினார்.