வயநாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட சோகத்தை கருத்தில் கொண்டு,முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடிக்கு கீழே கொண்டு வர வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கேரளாவை சேர்ந்த ஐந்து வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். மேத்யூ நெடும்பாரா என்ற வழக்கறிஞர் உட்பட 5 வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். உச்ச நீதிமன்றம் வழக்கை நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை மறுநாள் (06/12/2024) விசாரிக்க உள்ளது.
அந்த மனுவில் , முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் பெரும் ஆபத்தை சந்திக்கப்போகும் 50 லட்சம் சக குடிமக்களின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளோம்.
முல்லைப் பெரியாறு அணை 1895 ஆம் ஆண்டு 50 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டதாக அமைக்கப்பட்டது. அணை தற்போது 129 ஆண்டுகள் பழமையாகிவிட்டது, இது அதன் ஆயுட்காலத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் இடுக்கி, எர்ணாகுளம், ஆலப்புழை, கோட்டயம் மாவட்டங்கள் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டுவிடும்.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்றும், நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாகவும், அதற்கு அப்பாலும் கூட அதிகரிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகள் 50 லட்சம் மக்களின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே ஆபத்தை தடுக்க தற்போதைய முல்லைப் பெரியாறு அணையின் செயல்பாட்டை நிறுத்துவதே விவேகமானது.
குறிப்பாக வயநாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட சோகத்தை கருத்தில் கொண்டு,முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடிக்கு கீழே கொண்டு வர வேண்டும் என்று பல நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இத்தகைய சூழலில் ,முல்லைப் பெரியாறு அணை பலமானதாக இருப்பதால் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை திரும்பப் பெறுவதும், போர்க்கால அடிப்படையில் தகுந்த தீர்வைக் காண கேரள, தமிழ்நாடு மற்றும் மத்திய அரசு அரசுகளை வலியுறுத்துவதும் அவசியமாகும் என குறிப்பிட்டுள்ளனர்.
பிரபல கன்னட நடிகருக்கு புற்றுநோய் பாதிப்பு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்!