இந்தியக் குடியுரிமையை சரண்டர் செய்யும் விருப்பத்தில் உள்ள ஐபிஎல் முன்னாள் தலைவரும், பொருளாதாரக் குற்றத்தில் தேடப்பட்டுவரும் லலித் மோடி, பசிபிக் கடற்பகுதியியில் இருக்கும் வனுவாட்டு தீவில் செட்டிலாக உள்ளார்.
வனுவாட்டு தீவில் குடியுரிமை பெற்றுள்ள லலித் மோடி, இந்திய பாஸ்போர்ட்டை திருப்பி அளிக்க விருப்பம் உள்ளதாக மத்திய அ ரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஐபிஎல் டி20 தொடரை ஒளிபரப்பு செய்வதற்காக உரிமை வழங்கியதில் கடந்த 2009ம் ஆண்டில் ரூ.425 கோடி மோசடி செய்து லண்டனுக்கு லலித் மோடி தப்பிச்சென்றார். வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் லலித் மோடி இருக்கும் இடம் தெரிந்தாலும் அவரை இந்திய சிபிஐ, அமலாக்கப்பிரிவு அமைப்புகளால் இதுவரை கைது செய்ய இயலவில்லை.
இந்தியாவில் ஐபிஎல்டி20 தொடர் உதயமாவதற்கு மூலகர்த்தாவாக இருந்தது லலித் மோடிதான். இந்த லீக்கில் அப்போது லலித் மோடி செய்த மோசடி உடனடியாக வெளியாகவில்லை. ஆனால் வெளிநாட்டு நிதிமோசடி நடந்திருப்பது தெரியவந்ததும், சிபிஐ, அமலாக்கப்பிரிவு லலித் மோடியிடம் விசாரணை நடத்தியது. தன்மீதான விசாரணை பிடி இறுகுகிறது எனத் தெரிந்ததும், 2010ம் ஆண்டு லண்டனுக்கு லலித் மோடி தப்பிச் சென்றார் இதுவரை இந்தியா திரும்பவில்லை.
இந்நிலையில் இந்தியக் குடியுரிமையைக் கைவிட்டு, பசிபிக் கடல்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய தீவான வனுவாட்டு தீவில் குடியுரிமையை லலித் மோடி பெற்றுள்ளார். தன்னுடைய பாஸ்போர்டை ஒப்படைக்கும் வகையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு லலித் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறுகையில் “ லண்டனில் உள்ள இந்தியத்தூதரகத்தில் தனது பாஸ்போர்டை ஒப்படைக்கும் விருப்பம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவரின் விருப்பத்தையடுத்து விதிகள், நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.வனுவாட்டு தீவில் குடியுரிமையை லலித் மோடி பெற்றுவிட்டதாக தகவல்கள் எங்களுக்குக் கிடைத்தது.
இருப்பினும், லலித் மோடி வனுவாட்டு தீவு சென்றாலும், அவர் மீது அமலாக்கப்பிரிவு, சிபிஐ தொடர்ந்த வழக்குகள் தொடர்ந்து நடக்கும்” எனத் தெரிவித்தார். 2010ம் ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்தபின், ஊழல் நடந்திருப்பது தெரிந்ததும் பிசிசிஐ அமைப்பிலிருந்து லலித் மோடி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பாக பிசிசிஐ விசாரணை நடத்தியதில் அவர் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, பிசிசிஐ, ஐபிஎல் அமைப்பில் எந்தப்பதவியும் லலித் மோடி வகிக்க வாழ்நாள் தடையை பிசிசிஐ விதித்தது.
லண்டனில் குடியேறிய லலித் மோடி, அங்கிருந்தவாரே பல்வேறு காணொலிகலை வெளியிட்டு தன்மீதுள்ள குற்றம் போலியானது என விளக்கம் அளித்தார். சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கின் கீழ் லலித் மோடியை கைது செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் கைது வாரண்டனை கடந்த 2015ம் ஆண்டு பிறப்பித்தது ஆனால் இதுவரை லலி்த் மோடியை கைது செய்ய முடியவில்லை.
பசிபிக் கடற்பகுதியில் 80 சிறிய தீவுகள் உள்ளதில் அதில் ஒரு தீவு வனுவாட்டு. இங்கு 3 லட்சம் மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள். பிரிட்டன், பிரான்ஸிடம் இருந்து 1980ம் ஆண்டு விடுதலை பெற்ற வனுவாட்டு தீவு அரசு ரூ.13 கோடி மதிப்பில் எந்த நாட்டவருக்கும் குடியுரிமையை முதலீட்டுத் திட்டத்தின் கீழ் விற்பனை செய்கிறது. திருப்பிப் பெறமுடியாத வகையில் முதலீடு அல்லது நன்கொடையின் கீவ் 1.50 டாலரை வழங்கினால், வனுவாட்டு தீவு அரசு குடியுரிமையை வழங்கும்.