கள்ளக்குறிச்சியில் திமுக முன்னிலை : கள்ளக்குறிச்சி தொகுதியில் 14-வது சுற்று முடிவு நிலவரப்படி திமுக வேட்பாளர் மலையரசன் 38,985 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.14-வது சுற்று முடிவு நிலவரம் : திமுக – மலையரசன் – 3,63,584 வாக்குகள்; அதிமுக – குமரகுரு – 3,24,599 வாக்குகள்; பாமக – தேவதாஸ் உடையார் – 45,818 வாக்குகள்; நாதக – ஜெகதீசன் – 45,853 வாக்குகள்
தள்ளாடும் பாஜக :
350 இடங்களுக்கு மேல் இந்த முறை நிச்சயம் கைப்பற்றுவோம் என பாஜக கூறி வந்த நிலையில் தற்போது வரை வெறும் 234 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளனர். கருத்துக்கணிப்புகளும் பாஜகவுக்கு சாதகமாகவே அமைந்திருந்தன. கடந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருந்த நிலையில், இந்த முறை கூட்டணி அல்லாமல் ஆட்சி அமைக்க முடியாத நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.
மிகப்பெரிய வாக்கு வித்தியாசம் :
மேற்குவங்க மாநிலம் டைமண்ட் ஹார்பர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அபிஷேக் பானர்ஜி மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். நான்கு லட்சத்து 25 ஆயிரம் வாக்குகளை அவர் பெற்றுள்ள நிலையில், வாக்கு வித்தியாசம் 3 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.
கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கிய மம்தா:
மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி அனைத்து கருத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி முன்னிலையில் இருந்து வருகிறார். மொத்தம் 42 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் 31 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் இருக்கின்றனர். பாஜக 10 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலையில் இருக்கிறார்கள்
கலையிழந்த பாஜக அலுவலகங்கள் :
தேர்தல் முடிவுகளின் போது வழக்கமாக பாஜக அலுவலகங்களில் உற்சாகமும், கொண்டாட்டங்களும் கரைபுரண்டு ஓடும். ஆனால் இந்த முறை உற்சாகம் குறைவாகவே காணப்படுகிறது. டெல்லி மற்றும் தமிழ்நாடு பாஜக அலுவலகம் கமலாலயத்தில் அமைதி நிலவுகிறது. தொடர்ந்து பாஜகவே முன்னிலை வகித்தாலும், அவர்கள் எதிர்பார்த்த வெற்றி கை கூடவில்லை என்பதால் கொண்டாட்டங்களின்றி கலையிழந்து காணப்படுகின்றன. வெற்றி நிலவரம் வரத்தொடங்கிய பின்னர் கொண்ட்டங்களில் ஈடுபடுவார்கள் எனத்தெரிகிறது.
ஜெகன் மோகன் ரெட்டிக்கு வரலாறு காணாத வீழ்ச்சி :
ஆந்திராவில் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்திக்கிறார் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த தேர்தலை விட 100 இடங்களுக்கு மேல் இந்த முறை இழந்துள்ளார். மத்தியில் பாஜக அரசிற்கு மிக வெளிப்படையான ஆதரவை வழங்கியவர்களில் ஜெகன்மோகன் ரெட்டியும் ஒருவர் என்பதும், தேர்தல் நேரத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு உடன் பாஜக கூட்டணி அமைத்தது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலைக்கு தொடர் பின்னடைவு :
கோவை நாடாளுமன்ற தொகுதியில் 60,000 அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை 30 ஆயிரம் வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரன் பத்தாயிரம் வாக்குகளுக்கும் அதிகமாக பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் முப்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.
தலைநகரில் திமுக கொடி :
தலைநகர் சென்னையை பொறுத்தவரை வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய மூன்று தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். 2 சுற்றுகள் முடிவில் வட சென்னை தொகுதியில் கலாநிதி வீராசாமி 27,586 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தென் சென்னை தொகுதியில் திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன் 62,348 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் இரண்டாம் இடம் வகிக்கிறார். மத்திய சென்னை தொகுதியில் திமுகவின் தயாநிதி மாறன் 25,581 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கை :
நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து ஒரு தொகுதி ஏற்கனவே பாஜகவுக்கு கிடைத்துவிட்டது. ஆட்சியமைக்க 272 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 289 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 230 தொகுதிகளிலும் , பிற கட்சிகள் 23 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி 37 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 1 தொகுதியிலும், பாமக 1 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகிறது.