அரசு மருத்துவமனையில் 48 மணிநேரத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலி
மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நான்டெட் சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை 12 குழந்தைகள் உட்பட 24 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும், நேற்றிரவு நான்கு குழந்தைகள் உட்பட மேலும் ஏழு நோயாளிகள் இறந்ததாகவும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டாக்டர் சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நாந்தேட்டின் டீன் ஷியாம்ராவ் வகோட் கூறுகையில், மருந்துகள் அல்லது மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு இல்லை, நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனால் அவர்களின் உடல்கள் சிகிச்சைக்கு பதிலளிக்கவில்லை என்றார்.
பாஜக அரசு விளம்பரத்திற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கும் போது குழந்தைகளுக்கான மருந்துகளுக்கு ஏன் பணம் இல்லை? என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிக எண்ணிக்கையிலான இறப்புகளுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.