அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்றவை பாகவின் வேட்பாளர்களாக செயல்பட்டுக்கொண்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
5 மாநில தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மத்தியபிரதேசம் மாவிலம் குவாலியரில் நேற்று காங்கிரஸ் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டு பேசினார். அப்போது கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஒவ்வொரு தொகுதியிலும் பாஜகவுக்கு கண்ணுக்கு தெரிந்த ஒரு பாஜக வேட்பாளரும், கண்ணுக்கு தெரியாமல் மேலும் 3 வேட்பாளர்கள் இருப்பதாகவும் விமர்சித்தார்.
மேலும் அவர் கூறியதாவது, “பாஜகவுக்கு ஒவ்வொரு தொகுதிக்கும் 4 வேட்பாளர்கள் உள்ளனர். கண்ணுக்கு தெரிந்த பாஜக வேட்பாளர் ஒருவர் தான். ஆனால் கண்ணுக்கு தெரியாத மேலும் 3 வேட்பாளர்காளாக அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவை செயல்பட்டு வருகின்றன. அதிலும், முதல் நபரான அமலாக்கத்துறை , பிரதமர் மோடியை போன்று பாஜகவின் நட்சத்திர பேச்சாளராக பிரச்சாரம் செய்து வருகிறது.
2வது நபரான சிபிஐ மற்றும் 3வது வேட்பாளரான வருமான வரித்துறையும் எதிரணி வேட்பாளர்களை பலவீனப்படுத்த முயற்சி செய்து வருகிறது. அவர்களுடன் பிரதமர் மோடியும், முதலமைச்சர் சிவராஜ் சிங்க் சௌகானும் என ஐந்து பேரும் பஞ்ச பாண்டவர்கள் போல் சேர்ந்து நம்மை தோற்கடிக்க முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு உரிய பாடத்தை நாம் கற்பிக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர்களை அமலாக்கத்துறை அச்சுறுத்தி வருகிறது. இது சமமான போட்டி அல்ல.” என்று கார்கே பேசினார்.