பிரதமர் தலைமையில் அதிகாரம் இல்லாத நிதி ஆயோக்கை கலைத்துவிட வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று ஒன்பதாவது நிதி ஆயோக் கூட்டம் தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஏற்கனவே எதிர்கட்சிகள் ஆளும் 9 மாநில முதலமைச்சர்கள் பங்கிற்காமல் புறக்கணித்துள்ள நிலையில் மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூட்டத்தில் பங்கேற்க நேற்றே டெல்லி சென்றார்.தனக்கு சில முக்கிய கருத்துக்கள் கேட்க வேண்டி உள்ளதால் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கு பெறுவேன் என்று கூறி கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி முழுமையாக கலந்து கொள்வாரா அல்லது பாதியில் வெளிநடப்பு செய்ய செய்வாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கூட்டத்திலிருந்து மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார்.வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி மற்ற மாநில முதலமைச்சர்களுக்கு 10-20 நிமிடங்கள் பேச வாய்ப்பளிக்கப்பட்டதாகவும் தனக்கு 5 நிமிடங்கள் மட்டுமே பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு தன்னுடைய மைக் ஆஃப் செய்யப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். மேலும் கூட்டத்தில் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு பாரபட்சம் காட்டக்கூடாது என்பதை வலியுறுத்தியதாகவும் மம்தா பானர்ஜி கூறினார். மேலும் 2015-ம் ஆண்டில் இருந்து பிரதமர் தலைமையில் செயல்படும் இந்த அதிகாரம் இல்லாத நிதி ஆயோக்கை கலைத்து விட்டு 2014 வரை செயல்பட்டு வந்த planning commission என்றழைக்கப் படும் திட்ட குழுவை மீண்டும் அமைக்க வேண்டும் என்பதும் மம்தாவின் கருத்தாகும்.
மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததில் பாரபட்சமாக செயல்பட்ட மத்திய அரசுக்கு தனது கண்டனத்தையும் பதிவு செய்தார் மம்தா பானர்ஜி. ஏற்கனவே தங்கள் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டதின் காரணமாக தமிழ்நாடு முதலிமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள மாநில முதலமைச்சர் பிணராய் விஜயன், கர்நாடக முதலமைச்சர் சீதாராமையா, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, தெலங்கானா முதலமைச்சர் ரேவந் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், ஹிமாச்சல் முதலமைச்சர் சுக்வீந்தர் சிங், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய 9 – மாநில முதலமைச்சர்கள் புறக்கணித்த நிலையில் தற்போது மேற்கு வங்க மாநில முதலமச்சர் மம்தா பானர்ஜியும் பிரதமர் தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.