மணிப்பூர் – நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு
மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடைபெறும். இன்று காலை 11 மணிக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு இரண்டு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
பகல் 12 -மணிக்கு மீண்டும் மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடியது. மக்களவையில் துணை சபாநாயகர் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குறுகிய கால விவாதம் நடத்த, அவை தலைவர் ஜெகதிப் தன்கர் சம்மதம் தெரிவித்தார். ஆனால் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை இரண்டு மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் 2-மணிக்கு அவைகள் கூடியதும் அவையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு மணிப்பூர் விவகாரம் தொடர்பாக உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் எனவும் “மணிப்பூர்! மணிப்பூர்!!” எனவும் “வி வாண்ட் ஜஸ்டிஸ்” எனவும் கோஷங்களை எழுப்பினர். கடும் அமளி நீடித்ததால் மக்களவை மற்றும் மாநிலங்களவையும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமரின் மௌனம் மணிப்பூர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசத்திற்கும் தீங்கு எனவும், இந்த விவகாரத்தில் உடனடியான விசாரணை மற்றும் விவாதம் தேவை என பேசினார். இதற்கு மத்திய அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் எதிர்ப்பு குரல் தெரிவித்தனர்.
இதனால் மாநிலங்களவையிலும் கடும் அமளி ஏற்பட்டதால் மாநிலங்களவையும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டதால் மழைக்கால கூட்ட தொடரின் முதல் நாளிலே நாடாளுமன்றம் முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.