இமாச்சல பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு- 12 பேர் உயிரிழப்பு
இமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் 9 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இமாச்சல பிரதேசத்தின் குலு மணாலியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. சுமார் 9 கட்டிடங்கள் அடுத்தடுத்து சரிந்து விழுந்ததில், இதுவரை 12 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கனமழை காரணமாக கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து, அங்கிருந்தவர்கள் 3 நாட்களுக்கு முன்பு காலி செய்யப்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு சிம்லா உட்பட மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையுடன் கூடிய கனமழை பெய்யும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில், சிம்லா, சிர்மவுர், காங்க்ரா, சம்பா, மண்டி, ஹமிர்பூர், சோலன், பிலாஸ்பூர் மற்றும் குலு ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு மிதமான முதல் உயர்மட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் காங்ரா, குலு, மண்டி, சிம்லா, சோலன் மற்றும் சிர்மூர் மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வியாழன் அன்று கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம், ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது. கனமழையைக் கருத்தில் கொண்டு, சிம்லா, மண்டி மற்றும் சோலன் மாவட்டங்களில் புதன்கிழமை தொடங்கி இரண்டு நாட்களுக்கு அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
குலு மாவட்டத்தில் புதன்கிழமை பெய்த மழையால் குலு-மண்டி சாலை சேதமடைந்ததால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சிக்கித் தவிக்கின்றன. பாதிக்கப்பட்டுள்ள சாலைகளில் தேசிய நெடுஞ்சாலை 21 (மண்டி-குலு சாலை) மற்றும் NH 154 (மண்டி-பதான்கோட்) ஆகியவை அடங்கும் என்று மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. மாநிலத்தில் மொத்தம் 709 சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இமாச்சலப் பிரதேசத்தில் இந்த மாதம் மழை தொடர்பான சம்பவங்களில் 120 பேர் இறந்துள்ளனர், அதே நேரத்தில் மாநிலத்தில் ஜூன் 24 அன்று பருவமழை தொடங்கியதில் இருந்து மொத்தம் 238 பேர் இறந்துள்ளனர் மற்றும் 40 பேர் இன்னும் காணவில்லை.