அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதானி கிரீன் நிறுவனம் மின்சார விநியோகத்துக்கான ஆர்டரை பெறுவதற்காக 4 மாநில அரசுகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடரின் 9 ஆம் நாளான இன்று, நாடாளுமன்றத்துக்கு வந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், நாடாளுமன்ற வளாகத்தில் இந்த விவகாரத்தை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அவர்கள் “மோடியும் அதானியும் ஒன்று” என பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, “அதானி மீது விசாரணை நடத்த பிரதமர் மோடி அனுமதிக்க மாட்டார். ஏனெனில், அதானி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் பிறகு தானும் விசாரணைக்கு உட்பட வேண்டியது இருக்கும் என்பது அவருக்குத் தெரியும்.” என பேசினார்.
மக்களவைக்குள்ளும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை, சம்பலுக்குச் செல்ல முயன்ற ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தியது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
சபாநாயகர் ஓம் பிர்லா அதற்கு அனுமதி அளிக்க மறுத்துள்ளார். கேள்வி நேரம் முக்கியம் என்றும் திட்டமிட்ட ரீதியில் அவை நடைபெறும் எனக் கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து, கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்றது.
அரசியலுக்கு லாயக்கு அற்றவர் விஜய் … மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கடும் விமர்சனம்!