சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கிய இடம் ‘சிவ சக்தி’ என்று அழைக்கப்படும்- மோடி
சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கிய இடம் இனி ‘சிவ சக்தி’ என்று அழைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கிரீஸ் நாட்டிலிருந்து வந்த உடன் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தொலை கண்காணிப்பு மற்றும் கட்டளைக் கட்டமைப்பான இஸ்ட்ராக்-கைப் (ISRO Telemetry Tracking and Command Network – ISTRAC) பார்வையிட்டு, சந்திரயான் -3-ன் வெற்றி குறித்து இஸ்ரோ குழுவினரிடையே உரையாற்றினார். சந்திரயான் -3 திட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் சந்தித்து கலந்துரையாடினார். அங்கு சந்திரயான் -3 திட்டத்தின் புதிய தகவல்கள் மற்றும் முன்னேற்றம் குறித்தும் பிரதமருக்கு விளக்கப்பட்டது.
பெங்களூருவில் உள்ள இஸ்ரோ டெலிமெட்ரி டிராக்கிங் அண்ட் கமாண்ட் நெட்வொர்க்கில் (இஸ்ட்ராக்) விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், உடலும் மனமும் மகிழ்ச்சியால் நிரம்பும் இதுபோன்ற சந்தர்ப்பம் அமைவது மிகவும் அரிதானது என்று கூறினார். பொறுமையின்மை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் உண்டு என்று குறிப்பிட்ட பிரதமர், தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் சுற்றுப்பயணத்தின் போது அதே உணர்ச்சிகளைத் தாமும் அனுபவித்ததாகக் குறிப்பிட்டார். தமது மனம் எல்லா நேரங்களிலும் சந்திரயான்-3 திட்டத்திலேயே கவனம் செலுத்தியதாகக் கூறினார். இஸ்ட்ராக் மையத்தைப் பார்வையிடும் தமது திடீர் திட்டங்களால் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியம் குறித்துக் கூறிய பிரதமர், விஞ்ஞானிகளின் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, தைரியம், பக்தி மற்றும் ஆர்வத்திற்காக அவர்களைப் பார்த்து மரியாதை செலுத்த ஆர்வமாக இருந்தாகக் கூறினார்.
இது சாதாரண வெற்றி அல்ல என்றும் பிரதமர் கூறினார். இந்த சாதனை எல்லையற்ற விண்வெளியில் இந்தியாவின் அறிவியல் சக்தியை பறைசாற்றுகிறது என்று அவர் கூறினார். இந்தியா சந்திரனிலும் உள்ளது என்றும் நமது தேசியப் பெருமை சந்திரனில் பதிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார். முன்னெப்போதும் இல்லாத இந்த சாதனையை எடுத்துரைத்த பிரதமர், இது அச்சமற்ற மற்றும் இடைவிடாத முயற்சிகளை மேற்கொள்ளும் இன்றைய இந்தியா என்று குறிப்பிட்டார். புதிதாக சிந்தித்து, புதுமையான வழியில், இருண்ட பகுதிக்குச் சென்று உலகில் ஒளியைப் பரப்பும் இந்தியா இது என்று அவர் தெரிவித்தார். இந்த இந்தியா 21 ஆம் நூற்றாண்டில் உலகின் பெரிய பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கும் என அவர் கூறினார்.
சந்திராயன் -3 நிலவில் தரையிறங்கிய தருணம் தேசத்தின் நனவில் நீங்காததாகிவிட்டது என்று பிரதமர் கூறினார். தரையிறங்கிய தருணம் இந்த நூற்றாண்டின் மிகவும் ஊக்கமளிக்கும் தருணங்களில் ஒன்றாகும் என்று கூறிய அவர், ஒவ்வொரு இந்தியரும் அதை தனது சொந்த வெற்றியாக எடுத்துக் கொண்டனர் என்று குறிப்பிட்டார். இந்த மகத்தான வெற்றிக்காக விஞ்ஞானிகளைப் பிரதமர் பாராட்டினார்.
நிலவில் சந்திராயன் -3 தரையிறங்கிய புகைப்படங்களை விவரித்த பிரதமர், “எங்கள் ‘மூன் லேண்டர்’ நிலவுக்கான ஆபரணம் (‘அங்கத்’) போல நிலவில் உறுதியாக கால் பதித்துள்ளது என்றார். விக்ரமன் லேண்டரின் வீரம் ஒரு பக்கம், பிரக்யான் ரோவரின் வீரம் மறுபக்கம் என்று அவர் தெரிவித்தார். இப்போது பார்ப்பது நிலவு தொடர்பாக இதுவரை பார்த்திராத பகுதிகளின் படங்கள் என்றும், இதை இந்தியா செய்துள்ளதாகவும் என்றும் அவர் கூறினார். இந்தியாவின் அறிவியல் உணர்வு, தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் மனோபாவத்தை உலகமே அங்கீகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
சந்திரயான் 3-ன் வெற்றி இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் சொந்தமானது என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தத் திட்டத்தின் ஆய்வுகள் பிற நாடுகளின் நிலவுப் பயணங்களுக்கான வாய்ப்புகளுக்குப் புதிய கதவுகளைத் திறக்கும் என்று சுட்டிக் காட்டினார். இந்தப் பணி நிலவின் ரகசியங்களை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், பூமியில் உள்ள சவால்களை சமாளிக்கவும் பங்களிக்கும் என்று அவர் கூறினார். சந்திரயான் 3 திட்டத்துடன் தொடர்புடைய ஒவ்வொரு விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், பொறியாளர் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் பிரதமர் மீண்டும் ஒரு முறை வாழ்த்து தெரிவித்தார்
சந்திரயான் -3-ன் லேண்டர் தரையிறங்கிய இடம் இனி ‘சிவ சக்தி’ என்று அழைக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். சிவனில், மனிதகுலத்தின் நலனுக்கான தீர்மானம் உள்ளது எனவும் அந்த தீர்மானங்களை நிறைவேற்றும் சக்தி நமக்கு வலிமையை அளிக்கிறது என்றும் அவர் கூறினார். நிலவின் இந்த சிவ சக்திப் புள்ளி இமயமலை மற்றும் கன்னியாகுமரியுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார்.
அறிவியல் ரீதியாகத் தீர்வுகளைத் தேடுவதன் நலன்களை எடுத்துரைத்த பிரதமர், இந்த புனிதமான தீர்மானங்களுக்கு சக்தியின் ஆசீர்வாதம் தேவை என்றும், அந்த சக்தி நமது பெண்களின் சக்தி என்றும் கூறினார். சந்திரயான் -3 சந்திர பயணத்தின் வெற்றியில், நமது பெண் விஞ்ஞானிகள், நாட்டின் மகளிர் சக்தியினர் ஆகியோர் பெரும் பங்கு வகித்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். சந்திரனின் சிவ சக்தி புள்ளி இந்தியாவின் இந்த அறிவியல் மற்றும் தத்துவ சிந்தனைக்கு சாட்சியாக இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
சந்திராயன் 2 தனது தடங்களை விட்டுச் சென்ற இடம் இனி ‘திரங்கா’ (மூவர்ணக் கொடி) என்று அழைக்கப்படும் என்று பிரதமர் கூறினார். இந்தப் புள்ளி, இந்தியா எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும் என்றும், தோல்வி முடிவல்ல என்பதை நமக்கு நினைவூட்டும் என்றும் பிரதமர் கூறினார். வலுவான மன உறுதி இருக்கும் இடத்தில் வெற்றி என்பது உறுதி செய்யப்படும் என்று அவர் கூறினார்.