கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம்- பிரதமர் மோடி
மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழிவகைச் செய்யும் மசோதா, புதிய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டது. மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, சுமார் 11 மணி நேர விவாதத்துக்கு பின்னர் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, “ஆண்டாண்டு காலமாக மகளிர் மசோதாவுக்காக நாடு காத்திருந்தது. 27 ஆண்டுகாலம் கிடப்பில் இருந்த ோதாவை இரண்டே நாளில் நிறைவேற்றினோம். மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு சிலர் அரசியல் சாயம் பூச முயற்சி செய்கின்றனர். யாருடைய சுயநலமும் மகளிர் இட ஒதுக்கீட்டில் தடைகளை ஏற்படுத்த அனுமதித்ததில்லை.
பெண்கள் ஓர் உறுதி எடுத்தால், அதனை உயிரை கொடுத்தாவது நிறைவேற்றுவார்கள், குஜராத்தில் அமுல் நிறுவனம் வளர்ச்சி அடைந்ததற்கு பெண்களின் உழைப்பே காரணம், நாடாளுமன்றத்தில் மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மேம்படுத்துதலில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை நம் நாடு எட்டியுள்ளது” என்றார்.