Homeசெய்திகள்இந்தியாஅதிகாரிகள் பணியாளர்களை கண்டிப்பதை குற்றமாக கருத முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அதிகாரிகள் பணியாளர்களை கண்டிப்பதை குற்றமாக கருத முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

-

- Advertisement -

பணியிடங்களில் ஊழியர்களை மேல் அதிகாரிகள் கண்டிப்பதை கிரிமினல் குற்றமாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கி உள்ளது.

நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் சந்திப் மேத்தா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது.”இது போன்ற வழக்குகளில் தனி நபர்கள் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளை சுமத்த அனுமதிப்பது பேரழிவான விளைவுகளை வழிவகுக்கும். பணியிடத்தில் தேவைப்படும் முழு ஒழுங்குமுறை சூழலையும் முடக்கிவிடும்” என்றும் அந்த தீர்ப்பில் நீதிபதிகள் விளக்கி இருக்கிறார்கள்.

மரியாதையற்ற நடத்தை முரட்டுத்தனம் அல்லது ஆணவம் ஆகியவை இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி ) பிரிவு 504ன் அர்த்தத்திற்குள் வேண்டுமென்றே அவமதிப்பதாக இருக்காது” என்றும் அவர்கள் தெரிவித்தனர். அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பதை இந்திய தண்டனைச் சட்டத்தின் மேற்கண்ட பிரிவு கையாளுகிறது.

இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க கூடிய இந்த குற்றம் ஜூலை 2024 முதல் அமலுக்கு வரும் வகையில் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத்தின் கீழ் பிரிவு 352 உடன் மாற்றப்பட்டுள்ளது. உதவிப் பேராசிரியரை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்ட அறிவு சார் குறைபாடுகள் உள்ளவர்களின் அதிகாரம் அளிப்புக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குனருக்கு எதிரான 2022 ஆம் ஆண்டு குற்றவியல் வழக்கை ரத்து செய்த போது உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வந்துள்ளது.

உயர் அதிகாரிகளிடம் தனக்கு எதிராக புகார் அளித்ததற்காக மற்ற ஊழியர்கள் முன்னிலையில் இயக்குனர் தன்னை திட்டியதாகவும் கண்டித்ததாகவும் புகார்தாரர் தனது மனுவில் குற்றம் சாட்டியிருந்தார். நிறுவனத்தில் போதுமான அளவு பிபி இ கருவிகளை வழங்கவும் பராமரிக்கவும் இயக்குனர் தவறிவிட்டார் என்றும் இது கோவிட் 19 போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயத்தை ஏற்படுத்தியது என்றும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

குற்றப்பத்திரிகை மற்றும் அதில் உள்ள ஆவணங்கள் வெறும் பார்வையிலிருந்து பார்க்கும்போது குற்றச்சாட்டுகள் முற்றிலும் யூகமாக தெரிகிறது என்றும் எந்த கற்பனைகளும் அவை ஐ பி சி பிரிவுகள் 269 (ஆபத்தான நோயை பரப்பக்கூடிய அலட்சிய செயல்கள்) மற்றும் 270 (உயிருக்கு ஆபத்தான நோயை பரப்பும் தீங்கிழைக்கும் செயல்) ஆகியவற்றின் கீழ் குற்றங்களின் கூறுகளாக கருத முடியாது என்றும் அந்த தீர்ப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.

“எனவே எங்கள் கருத்துப்படி மூத்த அதிகாரியின் கண்டிப்பு இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 54 இன் கீழ் “வேண்டும் என்றே தூண்டி விட வேண்டும் என்று நோக்கத்துடன் செய்யப்பட்ட அவமானம் என்று நியாயமாக கருத முடியாது. பணியிடத்தில் ஒழுக்கம் மற்றும் கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான விஷயங்களுடன் அந்த கண்டிப்பு தொடர்புடையதாக இருந்தால்..”என்றும் நீதிபதிகள் தெளிவாக விளக்கி உள்ளனர்.

தலைமை பொறுப்பில் இருக்கும் ஒருவர் தனது இளைய ஊழியர்கள் தங்கள் தொழில் முறை கடமைகளை மிகுந்த நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செய்ய வேண்டும் என்பது நியாயமான எதிர்கால எதிர்பார்ப்பாகும் என்று தீர்ப்பில் முத்தாய்ப்பாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

MUST READ