சர்வீஸ் அனுபவத்தை மேம்படுத்த ஒரே நாளில் சர்வீஸ், இலவச ஓலா கேப் கூப்பன் மற்றும் சர்வீஸில் AI தொழில்நுட்பப் பயன்பாடு ஆகியவற்றை அறிவித்திருக்கிறது.
கடந்த சில வாரங்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது ஓலா. விற்பனையைக் கடந்து அதன் சர்வீஸ் நெட்வொர்கின் மோசமான நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வாடிக்கையாளர்கள் தங்களது ஆதங்த்தைக் கொட்டித் தீர்க்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் சுமார் 80,000 புகார்களைப் பெறுகிறதாம் ஓலா. இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனத்திற்கு இது கவலை தரக்கூடிய செய்தி தான்.
ஆனால், இந்த சர்வீஸ் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக புதிய திட்டங்களுடன் களமிறங்கியிருக்கிறது ஓலா. தங்களது புதிய திட்டங்களை எக்ஸ் தளத்திலும் பதிவிட்டிருக்கிறார் அதன் நிறுவனர் பவிஷ் அகர்வால்.
ஹைப்பர் சர்வீஸ் என்ற பெயரில் சர்வீஸுக்காவே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவிருக்கிறது அந்நிறுவனம். தற்போது இந்தியா முழுவதும் 800 விற்பனை மையங்களைக் கொண்டிருக்கும் நிலையில், 500 சர்வீஸ் செண்டர்களை மட்டுமே கொண்டிருக்கிறது ஓலா. இதனை வரும் டிசம்பர் மாதத்திற்குள் இரண்டு மடங்காக, அதாவது சுமார் 1000 சர்வீஸ் செண்டர்களை வரை விரிவுபடுத்தவிருக்கிறது அந்நிறுவனம்.
சின்ன சின்ன பழுதுகளை மூன்றாம் தரப்பு மெக்கானிக்குகள் மூலமே சரி செய்யும் வகையில் 1 லட்சம் மெக்கானிக்குகளுக்கு ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பழுது நீக்கம் குறித்து பயிற்சி வழங்கவிருக்கிறது அந்நிறுவனம். அதன் புதிய நெட்வொர்க் பார்ட்னர் திட்டம் மூலம், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இதனை சாத்தியப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது ஓலா.
ஓலா சர்வீஸ் குறித்து வாடிக்கையாளர்கள் அளிக்கும் புகார்களில் முக்கியமானது, அதிக நாட்களை எடுத்துக் கொள்வது என்பது தான். ஒரு வாடிக்கையாளர் தன்னுடைய ஓலா ஸ்கூட்டரை மூன்று மாதங்களுக்கும் மேலாக சர்வீஸ் செய்து கொடுக்கவில்லை என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பிரச்சினைய சரி செய்ய ஒரே நாளில் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சர்வீஸ் செய்து வழங்குவோம் என அறிவித்திருக்கிறது அந்நிறுவனம். அப்படி ஒரே நாளில் சர்வீஸ் செய்ய முடியாத பட்சத்தில், அந்த வாடிக்கையாளரின் பயன்பாட்டிற்கு மாற்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வழங்குவோம் எனத் தெரிவித்திருக்கிறது ஓலா.
அதுமட்டுமின்றி ‘ஓலா கேர்+’ வாடிக்கையாளர் என்றால், அவரது ஸ்கூட்டரை சர்வீஸ் செய்து கொடுக்கும் வரை இலவச ஓலா கேப் கூப்பன்களை வழங்குவோம் எனவும் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏற்படும் பழுதை அதன் வாடிக்கையாளர் கண்டறிந்து புகார் எழுப்புவதற்கு முன்பாகவே, கண்டறிந்து அதனை வாடிக்கையாளரின் வீட்டிற்கே வந்து சரி செய்து கொடுக்கும் நடைமுறையைக் கொண்டு வரவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ஓலா.
இதற்கான சாப்ட்வேர் அப்டேட்டானது மூவ்OS 5-வுடன் இந்த அக்டோபர் மாதத்தில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு வெளியிடப்படும் என பவிஷ் அகர்வால் அவரது X பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் பவிஷ் அகர்வால்.