ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 15க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தலிபான்கள் கூறியுள்ளனர்.
பர்மால், பாக்டிகா மீது பாகிஸ்தான் இரவு நேரத்தில் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு தலிபான் பாதுகாப்பு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியுள்ளது.
எங்களது நிலத்தையும், இறையாண்மையையும் பாதுகாப்பது தனது உரிமை என்று ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது. ‘வஜிரிஸ்தான் அகதிகள்’ குண்டுவீச்சில் குறிவைக்கப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்கள் பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு வந்தவர்கள். இறந்தவர்களில் குழந்தைகளும் பெண்களும் அடங்குவர்.
வான்வழித் தாக்குதலை பாகிஸ்தான் அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. எல்லையில் உள்ள தலிபான் நிலைகளை குறிவைத்து வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் மீது பாகிஸ்தான் தலிபான்கள் தாக்குதல்களை அதிகரித்துள்ளனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதல்களை தடுக்க ஆப்கானிஸ்தான் தலிபான்கள் தங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்று பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தலிபான் பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இனாயத்துல்லா கவர்ஜாமி, பாகிஸ்தான் பாதுகாப்பு வட்டாரங்களின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். ட்விட்டரில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ள அவர், ‘‘பொதுமக்கள், பெரும்பாலும் வஜிரிஸ்தான் அகதிகள், வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இருப்பினும், எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது சரியாக தெரியவில்லை.
இந்தத் தாக்குதலில் பல குழந்தைகள், பொதுமக்கள் வீரமரணம் அடைந்ததாக’’ கவர்ஜாமி குறிப்பிட்டுள்ளார். இடிபாடுகளுக்குள் இருந்து இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
வஜிரிஸ்தான் அகதிகளை, பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்த பழங்குடியினப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் என்று தலிபான்கள் கருதுகின்றனர். டஜன் கணக்கான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் தளபதிகள், போராளிகள் ஆப்கானிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாகவும், எல்லை மாகாணங்களில் ஆப்கானிஸ்தான் தலிபான்களால் பாதுகாக்கப்படுவதாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் கூறுகிறது.
தலிபான்களுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணங்களில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் குழுவினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் தலிபான் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு புகலிடமாக இருப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. தலிபான்கள் இந்த கூற்றுக்களை நிராகரித்து, தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு ஒத்துழைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.