தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இரண்டாவது முறையாக ஆளுநராக நியமிக்கும் திட்டம் உள்ளதா என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், தமிழக ஆளுநரின் பதவிக்காலம் ஜூலை 31 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், அவரை மீண்டும் இரண்டாவது முறையாக ஆளுநராக நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருவதாக குறிப்பிட்டு இருக்கிறார்.
பதவியில் இருக்கும் ஆளுநரை இரண்டாவது முறையாக நியமிப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த வழிவகையும் இல்லை என குறிப்பிட்டுள்ள மூத்த வழக்கறிஞர், ஆர்.என்.ரவியை இரண்டாவது முறையாக தமிழக ஆளுநராக நியமிப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்றும் அவரை மீண்டும் நியமித்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆர்.என்.ரவியை இரண்டாவது முறையாக தமிழக ஆளுநராக நியமிக்கும் திட்டம் உள்ளதா?
புதிய ஆளுநர் நியமிக்கும் வரை ஆர்.என்.ரவியே தமிழகத்தின் ஆளுநராக நீடிக்கச் செய்யும் திட்டம் உள்ளதா?
ஆர்.என்.ரவிக்கு பிறகு புதிய ஆளுநர் நியமிக்கும் திட்டம் உள்ளதா என தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாகவும், இதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.