பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபேவுக்கு குண்டு வெடிப்புக்கு காரணமாக இருக்கும் மர்ம ஆசாமி பேருந்தில் பயணம் செய்த புகைப்படத்தை என்.ஐ.ஏ வெளியிட்டுள்ளது.
கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் செயல்பட்டு வரும் உணவகம் ராமேஸ்வரம் கஃபே. அந்நகரத்தின் பல்வேறு பகுதிகளில் கிளை அமைத்து செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 1ம் தேதி வைட்ஃப்லீடு பகுதியில் இருக்கும் ராமேஸ்வரம் கஃபேவில் மதியம் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
இதில் உணவகத்தை சேர்ந்த ஊழியர்கள் 3 பேர் மற்றும் வாடிக்கையாளர்கள் 9 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேசியளவில் பரபரப்பை கிளப்பியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு போலீசாரும் தேசிய புலனாய்வு முகமையைச் சேர்ந்த அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரம் கஃபேவில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்தபோது, தலையில் தொப்பி மற்றும் மாஸ்க் அணிந்த ஒருவர் உணவகத்தில் பையுடன் வருவதும், அதை கடையில் வாசலில் வைத்துவிட்டுச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அதையடுத்து அந்த மர்ம ஆசாமியை சந்தேகிக்கப்படும் நபராக அறிவித்து, தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது.
அந்த நபரின் முகம் தெரியாமல் இருந்த நிலையில், ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு காரணமாக உள்ள நபரை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூ. 10 லட்சம் சன்மானம் கிடைக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. காவல்துறை மற்றும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு உதவியாக குண்டு வெடிப்புக்கு காரணமான நபரை பிடிக்கும் பணியில் பொதுமக்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் குண்டு வெடித்த நாளன்று சம்பவ இடத்துக்குச் செல்வதற்கு முன்னதாக மார்ச் 1ம் தேதி காலை 10.45 மணியளவில் ராமேஸ்வரம் கஃபேவுக்கு அருகாமையில் அமைந்திருக்கும் பேருந்து நிறுத்தத்தில் சந்தேகிக்கப்படும் மர்ம அசாமி பேருந்தில் இருந்து இறங்கியுள்ள காட்சிகள் சி.சி.டி.வி கேமரா மூலம் கிடைத்துள்ளது.
சாலையில் நடந்து காலை 11.34 மணிக்கு ராமேஸ்வரம் கபேவுக்குள் நுழையும் அந்த நபர், 11.43 மணிக்கு உனவகத்தில் இருந்து வெளியேறுகிறது. தொடர்ந்து 1 கி.மீ மேல் நடந்து செல்லும் மர்ம ஆசாமி பொதுப் பேருந்து பிடித்து திரும்பிச் செல்கிறார். குண்டு வெடிப்புக்கு முன்னதாக அந்த நபர் உடை மாற்றுவது உள்ளிட்ட காட்சிகள் சி.சி.டி.வி கேமரா மூலம் கிடைக்கப்பெற்றுள்ளன.
மேலும் உடை மாற்றிய பிறகு பேருந்தில் பயணம் செய்யும் நபருடைய முகத்தையும் என்.ஐ.ஏ கண்டறிந்துள்ளது. அதை வைத்து சம்மந்தப்பட்ட பேருந்தில் பணியாற்றும் நடத்துநரை வைத்து விசாரித்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்புக்கான காரணங்கள் குறித்து காவல்துறையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.