இரட்டை எஞ்சின் அரசை மக்கள் தேர்ந்தெடுத்தால் ஜார்கண்ட் மாநிலம் இரட்டிப்பு வேகத்தில் முன்னேறும் என்று பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரையின்போது தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா தேர்தலைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. நவ.13 மற்றும் நவ.20 என இரண்டு கட்டங்களாக அம்மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஜார்க்கண்டில் பாஜக பலமுறை பின்னடைவை சந்தித்திருக்கிறது. ஆகையால் இந்த முறை எப்படியேனும் ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்கிற நோக்கில், அக்கட்சி சார்பில் சூறாவளி பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அசத்தல் அறிவிப்புகளுடன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து இன்று ஜார்கண்ட் மாநிலத்தில் இரண்டு வெவ்வேறு பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார். முதலில் ஜார்க்கண்ட் மாநிலம் கர்வாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் விவசாயிகளை வலுப்படுத்த மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்ட போதெல்லாம், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி பல தடைகளை உருவாக்கியதாக குற்றம் சாட்டினார். இதற்கு தீர்வாக, நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மாநிலத்தில் பாஜகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி என இரட்டை எஞ்சின் அரசை மக்கள் தேர்வு செய்தால் ஜார்கண்ட் மாநிலம் இரட்டிப்பு வேகத்தில் முன்னேற்றம் அடையும் என்றும் கூறினார்.
மேலும், ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்தவுடன் காலியாக உள்ள 3 லட்சம் அரசு பணியிடங்கள் வெளிப்படை தன்மையுடன் நிரப்பப்படும் என்று உறுதியளித்துள்ளார். இவைத்தவிர, ‘பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம்’ மத்திய அரசு அறிமுகப்படுத்திய போது 2018ல் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி இத்திட்டத்தில் விவசாயிகள் யாரும் இணைய வேண்டாம் எனவும், மத்திய அரசால் வழங்கப்படும் பணம் மீண்டும் திரும்ப பெறப்படும் என பொய்யான வதந்திகளை பரப்பியதாகவும், ஆனால் இன்று வரை கோடிக்கணக்கான விவசாயிகள் இத்திட்டத்தின் பலன் அடைந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் ஜார்க்கண்ட் அரசு மாபியா கும்பலுக்கு அடிமையாகி விட்டதாக கடுமையாக சாடிய பிரதமர் மோடி, ஜார்க்கண்ட் மாநிலத்திற்குள் வரும் ஊடுருவல் காரர்களை காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தளம் – ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய மூன்று கட்சிகளும் ஆதரிப்பதாக குற்றம் சாட்டினார்.