ராகுல் காந்தியின் சகோதரி என்பதில் பெருமை கொள்வதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நெகிழ்சியாக தெரிவித்துள்ளார்.
18வது மக்களவை தேர்தலில் பாஜக கூட்டனி 296 தொகுதிகளையும், இந்தியா கூட்டணி 231 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளையும் சேராத கட்சிகள் 16 இடங்களையும் பிடித்துள்ளன. இதில் இந்தியா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி தனித்து 99 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியை கைப்பற்றவில்லை என்றாலும், காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் வெற்றியே ஆகும். இந்த வெற்றியில் ராகுல் காந்தியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கார்ட்டூன் படம் ஒன்றை பகிர்ந்து, தனது சகோதரர் ராகுல் குறித்து சமூக வலைதள பக்கத்தில் பிரியங்கா காந்தி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உங்களைப் பற்றி யார் என்ன சொன்னாலும், என்ன செய்திருந்தாலும் நீங்கள் களத்தில் உறுதியுடனேயே நின்றீர்கள். எந்த மாதிரியான சிக்கலை கண்டும் நீங்கள் பின்வாங்கவில்லை. உங்களது உறுதிப்பாடு மீது பலரும் சந்தேகம் கொண்டிருந்தனர். ஆனால், நீங்கள் கொஞ்சமும் நம்பிக்கையை இழக்கவில்லை.
பொய்களை பரப்பியபோதும் நியாயத்துக்காக நீங்கள் போராடுவதை விட்டுவிடவில்லை. உங்களை வீழ்த்த வெறுப்பையும், கோபத்தையும் கட்டவிழ்த்து விட்டனர். அது நாள்தோறும் உங்களை நோக்கி வந்தது. ஆனால், அதுவும் உங்களை வீழ்த்த முடியவில்லை. நீங்கள் அதனை அனுமதிக்கவில்லை.
நெஞ்சம் முழுவதும் நிறைந்த அன்பு, உண்மை மற்றும் கருணையுடன் போராடினீர்கள். உங்களது நெஞ்சுறுதியை நாங்கள் சிலர் பார்த்திருக்கிறோம். அதனை இப்போது அறியாதவர்களும் பார்த்துள்ளார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.