தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்த 48 மணி நேரத்திற்குள் பதிவான வாக்கு சதவீதத்தின் தரவுகளை வெளியிட வேண்டும் என உத்தரவிடக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கோரி முறையீடு – நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வழக்கை இன்று அவசர வழக்காக விசாரிப்பதாக உறுதி அளித்துள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 3 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவின் வாக்கு சதவீத தரவுகள் 11 நாட்களுக்குப் பிறகும், ஏப்ரல் 26ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்கு பதிவின் தரவுகள் நான்கு நாட்களுக்குப் பிறகும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தால் ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த 48 மணி நேரத்திற்குள் வாக்கு சதவீத தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட உத்திரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் இடையிட்டு மனு கடந்த 10ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
அம்மனுவில், நியாயமற்ற முறையில் வாக்கு சதவீத நிலவரங்களை தாமதமாக வெளியிடுவதும் , வாக்கு சதவீதங்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் உள்ளிட்டவை வாக்காளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஏடிஆர் அமைப்பு மனுவில் தெரிவித்து இருந்தது .
மேலும் வாக்குப்பதிவின் போது ஒவ்வொரு இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படக்கூடிய வாக்கு சதவீத நிலவரங்களுக்கும் தேர்தல் நிறைவடைந்த உடன் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் வாக்கு சதவீத தரவுகளுக்கும் இடையே 5% மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
எனவே மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்கு சதவீத நிலவரங்களை தேர்தல் நிறைவடைந்த உடன் 48 மணி நேரத்திற்குள் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட உத்தரவிட வேண்டும் என்று ஏடிஆர் மனுவில் கூறியிருந்தது.
இம்மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் அமர்வில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் முறையிட்டார். இதனை தொடர்ந்து வழக்கை இன்றைய தினம் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி உறுதி அளித்துள்ளார்.