புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தொடர்பான கோரிக்கைக்கு பழைய நிலையே தொடரும் என அம்மாநில முதலமைச்சருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துக் கோரி, கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, தீர்மானம் தொடர்பான கோப்புகள் துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது. இதற்கு துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் வழங்கியதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரும் கோப்புகள் அனுப்பப்பட்டிருந்தது.
இது தொடர்பாக, மத்திய அரசுக்கு புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி பலமுறை கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், முதலமைச்சர் ரங்கசாமிக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில், “புதுச்சேரிக்கு மாநில சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் பழைய நிலையே தொடரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மத்திய அரசின் நிலை குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
“வைகை, பல்லவன் ரயில்கள் வரும் அக்.10- ஆம் தேதி பகுதியாக ரத்து”!
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்திப்பேன். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் நேரில் சென்று புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து தர வலியுறுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.