ஃபெங்கல் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு விமானங்கள் தாமதம், பயணிகள் இல்லாமல் சிங்கப்பூர் விமானம் ரத்து. சென்னையில் தரை இறங்கும் விமானங்கள் அனைத்தும், வானில் சிறிது நேரம் வட்டமடித்து, விமான ஓடுபாதையை நன்கு கவனித்த பின்பே தரையிறங்க அனுமதிக்கப்படுகின்றன.

ஃபெங்கல் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை விமான சேவைகள் தாமதமாக இயக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன. குறிப்பாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய எ டி ஆர் ரக சிறிய விமானங்கள் தாமதமாக புறப்படுகின்றன.
சென்னையில் இருந்து விஜயவாடா துபாய் திருச்சி புவனேஸ்வர் மதுரை கோவை சிங்கப்பூர் கொச்சி ஹைதராபாத் மும்பை அந்தமான் உள்ளிட்ட 12 புறப்பாடு விமானங்கள் , தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.
அதைப்போல் சென்னையில் வந்து தரையிறங்க வேண்டிய விமானங்கள் மிகவும் கவனமாக ஓடுபாதை தெளிவாக இருந்தால் மட்டுமே தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது. இதனால் சென்னையில் தரையிறங்க வரும் விமானங்கள் சிறிது நேரம் வானில் வட்டமடித்து பறந்து விட்டு அதன் பின்பு சென்னையில் தரையிறங்கி கொண்டு இருக்கின்றன.
அதைப்போல் சென்னையில் இருந்து இன்று அதிகாலை 2.50 மணிக்கு சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் புயல், கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே உள்ளது.
சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், இதுவரையில் புயல் மழை காரணமாக விமானங்கள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்து ஆனதுக்கு காரணம் பயணிகள் இல்லாமல் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதோடு இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து வெளியிட்டு வரும் வானிலை அறிக்கை உன்னிப்பாக கவனித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இன்று நன்பகலுக்கு மேல் காற்றின் வேகம் அதிகரிக்குமே ஆனால், விமான சேவைகள் ரத்து செய்ய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இதுவரையில் விமான சேவைகள் வழக்கம் போல் இயங்கிக் கொண்டு இருக்கின்றன என்று கூறுகின்றனர்.