இந்தியாவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் “வாட்ஸாப் – (Whatsapp”) செயலியை தடை செய்து உத்தரவிட கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வாட்ஸாப் செயலி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை என்பது உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 50 கோடி பேர் இந்த செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்தியாவில் சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை கடைபிடிக்க தவறிய வாட்ஸாப் செயலுக்கு இந்தியாவில் தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
கேரள மாநிலத்தை சேர்ந்த கே.ஜி ஓமனக்குட்டன் என்பவர் குறிப்பிட்ட இதே கோரிக்கை அடங்கிய மனுவை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்ற முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் , அரவிந்த்குமார் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது மனுதாரர் தரப்பில் தனியுரிமை கொள்கை மீறி சில சூழ்நிலைகளில் பயனாளர்கள் பகிரும் தகவல்களை வாட்ஸப் நிறுவனம் சேமித்து கொள்வதாகவும் , நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்க முடியாத வாட்ஸாப் செயலியை ஆவணங்கள் பகிர்வதில் இருந்து பல பயன்பாடுகளுக்கு பயன்படுத்துவது ஆபத்து என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என கூறி மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.