பெங்களுரில் அதிகாலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணை, மர்மநபர் ஒருவர் கட்டிப்பிடித்து அநாகரிகமாக நடக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வருகிறார். இவர் நாள்தோறும் அதிகாலை தனது தோழியுடன் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதன்படி, கடந்த 2ஆம் தேதி அதிகாலை பெங்களூரு கோணங்குண்டே பகுதியில் அந்த பெண் தனியாக நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது திடீரென பின்னால் இருந்து வந்த மர்மநபர் ஒருவர் அந்த பெண்ணை பின்புறமாக இருந்து கட்டிப்பிடித்து அநாகரிகமாக நடக்க முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான அந்த பெண் தப்பித்து ஒட முயற்சித்த நிலையில், மர்மநபர் அவரை விரட்டிச் சென்று கட்டியணைத்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலிசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மர்மநபரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தேடி வருகின்றனர். மேலும் ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளில் நடைப்பயிற்சியில் ஈடுபடும் பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.