Homeசெய்திகள்இந்தியாகேரளாவை உலுக்கிய ஷாரோன் ராஜ் கொலை வழக்கு: கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதிப்பு

கேரளாவை உலுக்கிய ஷாரோன் ராஜ் கொலை வழக்கு: கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதிப்பு

-

- Advertisement -
kadalkanni

கேரளாவை உலுக்கிய ஷாரோன் ராஜை கொலை செய்த வழக்கில் காதலி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் ஷாரோன் ராஜ்(23). இவர் குமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வந்தார். இந்நிலையில் ஷாரோன் ராஜுக்கும், களியக்காவிளை  சேர்ந்த கிரீஷ்மா (24) என்ற கல்லூரி மாணவிக்கும் இடையே காதல் மலர்ந்தது.  இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டதை ஷாரோன் ராஜ் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த அக்டோபர் 25ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே, தங்களுடைய மகனுக்கு காதலி கிரீஷ்மா தான் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார் என்று ஷாரோன் ராஜின் பெற்றோர் பாறசாலை போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கில் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு டிஎஸ்பி ஜான்சன் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில் ஷாரோன் ராஜுக்கு காதலி கிரீஷ்மா கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்தது தெரிய வந்தது.

நெல்லையைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரருக்கு கிரீஷ்மாவை திருமணம் செய்து கொடுக்க அவரது பெற்றோர் விரும்பினர். முதலில் அதற்கு கிரீஷ்மா சம்மதிக்கா விட்டாலும் பின்னர் திருமணத்திற்கு சம்மதித்தார். ஆனால் ஷாரோன் ராஜ் தன்னுடைய காதலில் உறுதியாக இருந்ததால் அவரை கொல்ல கிரீஷ்மா தீர்மானித்தார். இதன்படி கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி ஷாரோன் ராஜை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கிரீஷ்மாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் இந்தக் கொலைக்கு கிரீஷ்மாவின் தாய் சிந்து மற்றும் மாமா நிர்மலகுமாரன் நாயர் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களையும் போலீசார் கைது செய்து திருவனந்தபுரம் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த 2 வருடங்களாக நெய்யாற்றின்கரை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதிக்கட்ட விசாரணை முடிந்த நிலையில் கடந்த 17ம் தேதி இந்த வழக்கில் கிரீஷ்மா மற்றும் அவரது தாய் மாமா நிர்மல குமாரன் நாயர் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிபதி பஷீர் அறிவித்தார். தாய் சிந்து இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். கிரீஷ்மாவுக்கு எதிராக கொலை, விஷம் கொடுத்தது மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய குற்றங்கள் நிரூபணமாகி உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது. தொடர்ந்து இருவருக்குமான தண்டனை இன்று அறிவிக்கப்படும் என்று நீதிபதி பஷீர் கூறினார்.

அதன்படி, இன்று வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, குற்றவாளி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அவரது மாமா நிர்மலகுமாரன் நாயருக்கு 3 வருடங்கள் சிறையும் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பஷீர் தீர்ப்பளித்தார். ஷாரோன் ராஜ் கொலை வழக்கை விசாரித்த கேரள போலீசாருக்கு நீதிபதி பஷீர் பாராட்டு தெரிவித்தார். நேரடி சாட்சிகள் இல்லாத போதிலும் இந்த வழக்கை கேரள போலீசார் மிகவும் திறமையாக விசாரித்துள்ளனர் என்று அவர் கூறினார்.

MUST READ